கொய்யாக்கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்க்கப்படும் மரவகையாகும். இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. இதற்கு ஜாம்பலா, கோவா, பலாம்பர் என்ற பெயர்களும் உண்டு. கொய்யா முக்கனியான மா, பலா, வாழை இவற்றிக்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் இது.
கொய்யா கோடைக்காலங்களில் தான் அபரிமிதமாக விளையும். தற்போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.கொய்யாவில் பலவகைகள் உள்ளன. தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப்பகுதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ளன. ஒரு சில வகை கொய்யாவின் சதைப்பகுதி ரோஸ் நிறத்தில் காணப்படும். இவை அனைத்தின் மருத்துவப் பயனும் ஒன்றுதான். கொய்யாக்கனியின் சுவையைப் போல் அதன் மணமும் ரம்மியமாக இருக்கும். இதில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக நெல்லிக்கனிக்கு அடுத்த நிலையில் வைட்டமின் சி சத்து கொண்ட பழம் கொய்யாதான்.
மருத்துவப் பயன்கள்
மலச்சிக்கல் தீரும்: நோயின் ஆரம்பமே மலச்சிக்கல்தான். அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்துதான் ஆரம்பிக்கும். மலச்சிக்கலைப் போக்கினாலே நோயில்லா நல்வாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் கூற்று. நன்கு கனித்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். குடலின் செரிமான சக்தி அதிகரிக்கும்.வயிற்றுப்புண் ஆறும்: தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் அவை அஜீரணத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்படுத்துகிறது. இதனைப் போக்க உணவுக்குப்பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிக நல்லது. மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூல நோயிலிருந்து விடுபடலாம்.
கல்லீரல் பலப்படும்: உடலின் சேமிப்புக் கிடங்கான கல்லீரல் பாதிக்கப்பட்டால், உடலின் பித்தத்தின் தன்மை மாறுபடும். இதனால் உடல் பல பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும். இதை தவிர்த்து கல்லீரலை பலப்படுத்த கொய்யாப்பழத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.
நீரிழிவு நோயாளிகளுக்கு: நீரிழிவு நோயின் தாக்கம் கண்டாலே அதை சாப்பிடக் கூடாது இதை சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் பாடாய்ப்படுத்தும். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளை குறைக்க கொய்யாப்பழம் உகந்தது. மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மையும் உண்டு.
ரத்தச்சோகை மாறும்: ரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் ரத்தச்சோகை உண்டாகிறது. இந்தியக் குழந்தைகளில் அதுவும் பெண் குழந்தைகளில் 63.8 சதவீதம் குழந்தைகள் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இக்குறையை பழங்களும் கீரைகளும் நிவர்த்தி செய்யும். இதில் குறிப்பாக கொய்யாப்பழம் ரத்தச்சோகையை மாற்றும் தன்மை கொண்டது.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு:
குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு அளவோடு கொய்யப்பழத்தைக் கொடுத்து வந்தால் குழந்தைகளின் எலும்புகள் பலப்படும். பற்கள் பலமடையும். நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.குழந்தைகளுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. நரம்புகளைப் பலப்படுத்தும். உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும்.
கொழுப்பைக் குறைக்கும்: அதிக ரத்த அழுத்தம், அதிக கொழுப்பை குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்யாப்பழம் உண்டு வந்தால் கொலஸ்டிரால் குறையும் என இந்திய இருதய ஆராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளது.
இதய படபடப்பு நீங்கும்: ஒரு சிலருக்கு சிறிது வேலை செய்தால் கூட இதயம் படபடப்பு உண்டாகிவிடும். உடலில் வியர்வை அதிகம் தோன்றும். இது இதய நோயின் அறிகுறியாகக்கூட அமையலாம். இந்த படபடப்பைக் குறைக்க கொய்யாப்பழம் மிகவும் உகந்தது. இதய படபடப்பு உள்ளவர்கள் தினம் ஒரு கொய்யாப்பழம் உண்பது நல்லது.