ஒரு நாட்டின் பண்பாடு, மொழி மற்றும் சிறப்புகளை உலகில் பல இடங்களுக்கு எடுத்துச் செல்வது அஞ்சல் தலைகள் தான். இந்தியா போன்ற பல மொழிகள், பண்பாடுகள் மற்றும் சிறப்புகள் உள்ள நாட்டின் அஞ்சல் தலைகள் ஒரே ஒரு இந்திய மொழியில் மட்டுமே வெளியிடுதல் நியாயம் தானா என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவில் இந்தி மட்டும் தான் பேசப்படுகிறதா ? வெளிநாட்டில் வாழும் பலருக்கு இப்படியான செய்தி தான் போய் சேருகிறது. இந்திய நாட்டின் அஞ்சல் தலைகளை வெளிநாட்டினர் பார்க்க நேர்ந்தால், இந்தியாவில் இந்தி மட்டும் தான் தேசிய மொழி என்ற தவறான புரிதலுக்கு அவர்கள் ஆளாகின்றனர்.
மேலும் தமிழ்நாட்டில் இருந்து பிற இந்திய மாநிலங்களுக்கு செல்லும் உள்நாட்டு அஞ்சல் தலைகளிலும் தமிழ் இல்லை. எடுத்துக் காட்டாக தமிழ்நாட்டில் இருந்து வங்கத்திற்கு ஒரு அஞ்சல் சென்றால் , அதுவும் இந்தி மொழியிலேயே இருக்கிறது. அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அஞ்சல் தலையும் இந்தியில் தான் இருக்கிறது. இங்கு வேற்றுமையில் ஒற்றுமை எங்கு வாழ்கிறது ?
தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் அஞ்சல் தலைகள் தமிழில் இருந்தால் , மேற்கு வங்கத்திற்கு சென்றடையும் போது அங்குள்ள மக்கள் தமிழ் எழுத்துருக்களை அறிந்து கொள்வார்கள் இல்லையா? அதே போல் மேற்கு வங்கத்தில் இருந்து வரும் அஞ்சல் தலைகள் தமிழகம் வரும் போது அவை வங்க மொழியில் இருந்தால் தமிழர்கள் வங்க தேசத்தை பற்றியும் , அவர்கள் பண்பாட்டை, எழுத்துருக்களை பற்றியும் அறிந்து கொள்ளலாம் அல்லவா ? இப்படி ஒவ்வொரு தேசிய இனங்களும் அவர்கள் அடையாளத்தையும் , மொழியையும் அஞ்சல் தலை மூலமாக மற்ற தேசிய இனங்களுக்கு எடுத்துச் செல்ல அஞ்சல் தலை உதவும் அல்லவா ?
உலக நாடுகளில் இலங்கை அரசு தமிழ் மொழிக்கு முழு உரிமையும் கொடுத்து அனைத்து அஞ்சல் தலைகளிலும் தமிழில் வெளியிடுகிறது. தமிழ் இனத்தை அழிக்கும் இலங்கை தேசம் கூட தமிழ் மொழியை அரசு மொழியாக்கி வாழ வைக்கிறது. தமிழீழம் தமிழருக்கு அமையவில்லை. ஒரு வேலை அமைந்திருந்தால் இப்படத்தில் காணப்படும் 'ஈழம்' என்ற சொல்லை தாங்கிய அஞ்சல்தலை உலகெங்கும் பரவி இருக்கும். அதே போல் 1960 களில் தமிழரசு என்ற பெயர் தாங்கி ஈழத் தமிழர்களால் ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. தமிழர்களுக்கு எல்லா உரிமையும் வேண்டும் என்றும் சிங்கள ஒருமொழி கொள்கையை எதிர்த்தும் தமிழர்கள் அப்போது தமிழரசு கட்சியின் சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டனர். மொரிசியஸ் , மலேசியா போன்ற வெளிநாடுகள் கூட அவ்வப்போது தமிழை பெருமைப்படுத்தும் விதமாக தமிழ் எழுத்துகளை தாங்கிய அஞ்சல் தலையை வெளியிடுகிறது.
நிலைமை இப்படி இருக்க இந்தியாவில் மட்டும் இந்தி அல்லாத எந்த மொழிக்கும் அஞ்சல் தலை மற்றும் நாணயங்களில் இடமில்லை என்பது எவ்வளவு பெரிய அவமானம். இந்தியாவில் முதல் மொழி , உலகின் மூத்த மொழி தமிழாக இருந்தும் தமிழ் மொழி இந்திய அஞ்சல் தலையில் வரவில்லையே என்ற ஏக்கம் தமிழ் ஆர்வலர்கள் நடுவே நெருப்பாக கனன்று கொண்டே தான் இருக்கிறது. ஒரு நாள் எரிமலையாக கூட வெடிக்கலாம். அஞ்சல் தலையில் தமிழையும் , பிற மொழிகளையும் கொண்டு வருவதில் எந்த சிக்கலும் இல்லை. இந்திய அரசு நினைத்தால் செய்யலாம். ஆனால் திட்டமிட்டே பிற மொழிகளை புறக்கணிக்கும் ஹிந்திய அரசுக்கு இருப்பதால் இதை செய்யுமா என்பது தான் கேள்விக்குறி .
தமிழ்நாடு அரசு இதற்கான குரலை உடனே கொடுக்க வேண்டும். அந்தந்த மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் அஞ்சல் தலைகள் அந்தந்த மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் என்ற சட்டம் இயற்ற வேண்டும். மாநிலங்களின் பண்பாடு மற்றும் மொழி எழுத்துருக்களை தாங்கிய அஞ்சல் தலைகளை வெளியிடும் முழு உரிமையும் மாநில அரசுக்கே வழங்கப்படுத்தல் வேண்டும். ஆளும் கட்சிகள் எதிர்கட்சிகள் இதற்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும். அப்போது தான் உண்மையில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பதத்திற்கு பொருள் காணப்படும். தமிழும், தமிழர் பண்பாடும் அஞ்சல் தலை மூலகமாக உலகெங்கும் பவனி வரும்.
- தமிழர் பண்பாட்டு நடுவம்( From Facebook)
No comments:
Post a Comment