Friday, 13 December 2013

பொற்கைப் பாண்டியன்

நீதிக்காக தனது கையை 

வெட்டிக்கொண்ட பொற்கைப் 

பாண்டியன்.
==================


பல்வளம் உடைய நாடு பாண்டிய நாடு.
அந்நாட்டின் தலைநகரம், மதுரை மாநகரம்.
அங்கிருந்து அரசாண்டு வந்தான் பாண்டிய
மரபிலுதித்த அரசனொருவன். அவன் பெயர்
யாது என்பது வெளிப்படவில்லை. ஆயினும்
பொதுமக்கள், அவனை பொற்கைப் பாண்டியன்
என்று காரணப் பெயரிட்டு அழைத்து வந்தனர்.
பொற்கைப் பாண்டியன் அறிவு, அன்பு, பண்பு,
நீதி தவறாதவன். பொய், களவு,
கொலை முதலியவற்றுக்குச் சிறிதும்
இடமளிக்காதவன். குடிமக்களிடத்து மிக்க
பற்று உடையவன். அவர்கள் நன்மையைப் பெரிதும்
விரும்புபவன். அவர்களுடைய எண்ணங்களைத்
தெரிந்துகொள்வதில் மிக்க ஆர்வமுடையவன்.
அதன் பொருட்டு இரவு நேரங்களில் நகர்ச்
சோதனைக்குச் சென்றுவரும் வழக்கத்தையும்
கொண்டிருந்தான்.


ஒரு நாள் இரவு, பொற்கைப் பாண்டியன் சேவகன்
போல மாறுவேடம்
பூண்டு நகர்ச்சோதனை செய்யப் போனான். பெருந்
தெருக்களைச் சுற்றி வந்தான். சிறிய சந்துகளிலும்
நுழைந்து வந்தான். இறுதியில் பார்ப்பனர் ஒரு சேர
வாழும் தெரு ஒன்றுக்குப் போனான். அந்த
தெரு மிகவும் சிறிய தெரு. அதில் ஏறத்தாழ
ஐம்பது வீடுகள் இருந்தன. அந்த வீடுகள்
அனைத்தும் நன்கு மூடப்பட்டு இருந்தன.

ஆளரவமோ, பேச்சொலியோ எதுவுமே சிறிதும்
இல்லாமலும் இருந்தன. தெருவே மிகவும்
அமைதியாய்க் காணப்பட்டது. ஆனால், தெருவின்
இறுதியில் இருந்த ஒரு வீட்டில் மட்டும்
பேச்சொலி கேட்டது.
அந்த வீடு கீரந்தை என்னும் பார்ப்பனன்
ஒருவனுடைய வீடு ஆகும். அவன் மிக வறியவன்.
மனைவி ஒருத்தியைத் தவிர, வேறு எந்தத்
துணையும் இல்லாதவன். அரசன் அந்த
வீட்டை அடைந்து மறைந்து நின்றான்.
உள்ளே நிகழும் பேச்சைக் காது கொடுத்துக்
கேட்டான்.

"கண்ணே! நான் கங்கையாறு சென்று நீராடி,
காசி சென்று வாழ்க்கையை வளமுற நடத்த,
வேண்டும் பொருள் தேடி வருகிறேன். அதுவரை நீ
இங்கேயே இரு!" என்றான் கீரந்தை. "தாங்கள்
சென்று மீளும்வரை நான் ஒருத்தியாய் இந்தக்
காப்பில்லாத வீட்டில் எப்படி இருப்பேன்?
அது காறும் என்னைக் காப்பாற்றுபவர் யார்?"
என்று அச்சம் தோய்ந்த குரலில் கேட்டாள் அவன்
மனைவி.

அதற்கு அவன்,
"நாட்டு மக்களைக் காப்பவன் அரசனே ஆவான்.
அவனது காவலுக்கு முன்னே வேறு காவல்களென்ன
செய்யும்? பயனற்றவையாய் அன்றோ முடியும்?
நமது அரசனும் நாட்டு மக்களின் நலிவு காணப்
பொறுக்க மாட்டான். ஆகவே, அவன் உறுதியாக
உன்னைக் காப்பான்." என்று மறுமொழி கூறினான்.
காது கொடுத்து ஒற்றுக் கேட்டிருந்த அரசன்
களிப்புற்றான், கூத்தாடினான்,

அரண்மனை சென்று நன்கு தூங்கினான். மறுநாள்
பொழுது புலர்ந்தது.
அரசன் படுக்கை விட்டு எழுந்தான். முதல் நாள்
இரவு நிகழ்ந்த
நிகழ்ச்சி அவனது நினைவுக்கு வந்தது. பொருள்
தேடி வரச் சென்ற
கீரந்தை திரும்பி வரும்வரை அவனுடைய
மனைவியைக் காப்பாற்ற வேண்டும்
என்று எண்ணினான். அவளுக்கு மட்டும் உணவுப்
பொருள்களைக் கொடுத்தனுப்பலாம் என அவன்
ஒரு கணம் எண்ணினான். மறுகணம் அது தவறு.
பலரும் பலவாறு கருத இடமளிக்கும்
என்று கருதினான். முடிவில் அந்தத் தெருவில் உள்ள
அனைவருக்குமே உணவுப்
பொருள்களை அளிக்குமாறு அமைச்சனுக்கு ஆணையிட்டான்.

அதன்படி நாள்தோறும் நிகழ்ந்துவந்தது.
அதோடு அரசனும் நாள்தோறும் நள்ளிரவில்
மாறுவேடம் பூண்டு நகர்க் காவல்
சென்று கீரந்தை மனைவிக்கு யாதோரு கேடும்
நிகழாதவாறு காத்து வந்தான். இதனை அந்த ஏழைப்
பார்ப்பனன் மனைவி அறியாள். நாட்கள் பல
சென்றன.
ஒரு நாள் இரவு அந்த வீட்டில் ஆண் குரல்
கேட்டது. காவலுக்குச் சென்றிருந்த அரசன்
இதனைக் கேட்டு திடுக்கிட்டான்; முகவும்
வருந்தினான். உள்ளே இருப்பவன் கணவனோ,
வேறு யாரோ என்ற ஐயம்
அரசனுக்கு உண்டாயிற்று.

அந்த ஐயத்தைப்
போக்கிக் கொள்ளும் பொருட்டு, அந்த
பார்ப்பனனுடைய வீட்டுக் கதவினைத்
தட்டு ஒலி செய்தான். பொருள் ஈட்டச் சென்றிருந்த
பார்ப்பனன் அன்று பகலே வந்துவிட்டான்.
அதனை அறியான் அரசன்.
கதவு தட்டப்படும் ஒலியினைக் கேட்ட பார்ப்பனன்,
வெகுண்டெழுந்து, "யாரது?" என்று அதட்டிய
குரலில் கேட்டான். அவன் மனம் தீய
எண்ணங்களை எண்ணியது. அதை அறிந்த அவன்
மனைவி செய்வது இன்னதென்று அறியாது திகைத்தாள்.

அவனது தீய எண்ணத்தைத் தெளிவிக்கும்
வழிவகை தெரியாது தவித்தாள்; "அரசன் காப்பான்
என்று கூறினாரே அன்று. அந்த அரசன்
இன்று எங்கே?" என்று அவள் கதறினாள்.
நிலையறிந்தான் அரசன்; நெஞ்சம் துணுக்குற்றான்;
திகைப்படைந்தான். "ஒரு வீட்டில் மட்டும்
தட்டினால், தட்டியவன் யாரோ என்ற ஐயம் எழுமே"
என்று கருதினான்; சிந்தித்தான்; தெளிவு பிறந்தது.
உடனே, அந்தத் தெருவில் இருந்த
எல்லா வீடுகளையும் தட்டி,
ஒலி எழுப்பிக்கொண்டே ஓடி,
அரண்மனை சேர்ந்தான். தெருப் பார்ப்பனர்
அனைவரும் கதவைத்
திறந்து கொண்டு வெளியே வந்தனர்; "கதவைத்
தட்டியவர் யார்?" என ஒருவருக்கொருவர் கேட்டுக்
கொண்டனர். ஒருவராலும் இன்னார் எனக்
கண்டு பிடிக்க முடியவில்லை. கள்வனாய்த்தான்
இருக்க வேண்டும் என்று கருதினர். "பாண்டிய
அரசன் ஆட்சியிலும் களவு நிகழ்வதா?" எனக்
கேட்டு வருத்தப்பட்டனர்.
மறுநாள் பொழுது புலர்ந்தது.

பார்ப்பனர்
அனைவரும் அரண்மனை சென்றனர்; அரசனைக்
கண்டனர். இரவு நடந்ததை எடுத்துரைத்து,
முறை வேண்டினர். அரசன் வருந்தினான்;
அமைச்சரை அழைத்து பார்ப்பனருடைய
முறையீட்டை கூறினான்.

"அவ்வாறு கதவைத்
தட்டியவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?"
என்று கேட்டான்.
அமைச்சர், "தட்டியவனைக் கண்டு பிடித்து,
அவனை விசாரித்த பிறகல்லவா, அதற்கான
தண்டனையைப் பற்றி எண்ண வேண்டும்?" என்றார்.

"அதைப்பற்றிய அக்கறை உமக்கு வேண்டாம்.

தவறிழைத்தவனுக்குக் கொடுக்கக் கூடிய
தண்டனை என்ன? அதை மட்டும் கூறும்!"
என்றான்.
அதற்கு அமைச்சர், "குற்றம் புரிந்தவன்
கையை வெட்டி எறிதலே தக்க தண்டனை ஆகும்!"
என்றார். உடனே அரசன் உடைவாளை உருவினான்.
யாரையோ வெட்டப் போகிறான் அரசன்
என்று எல்லோரும் உன்னிப்பாக கவனித்தனர்.

ஆனால், அரசன் தனது வலக் கையைத்
தானே வெட்டி எறிந்தான்! குருதி பெருகி விழிந்தது!
பார்ப்பனர் பயந்தனர்; நடுங்கினர். "அரசே! தாங்கள்
தங்கள் கையை வெட்டிக் கொள்ளக் காரணம்
என்ன?" என்று கேட்டனர். அரசன்
நடந்தவற்றை விரிவாக விளக்கிக் கூறினான்.

மன்னன் செயல் அறிந்து வியந்தனர் மக்கள்;
"இவனன்றோ நீதி நெறி தவறாத நேர்மை மிக்க
அரசன்!" என்று கூறி மகிழ்ந்தனர். அன்று முதல்,
பொன்னால் கையொன்று செய்து பொருத்திப்
பொலிவுறச் செய்து, பொற்கைப் பாண்டியன் என
அழைத்து வரலாயினர்.

No comments:

Post a Comment