தமிழ் மொழியை நேசிக்கும் மலையாளக் குடும்பம் ! 1172 மதிப்பெண் பெற்ற மாணவி தமிழ் பட்டப்படிப்பு படிக்க ஆர்வம்!
தமிழ் மீது உள்ள பற்று காரணமாக பிளஸ் 2 தேர்வில் 1,172 மதிப்பெண்கள் எடுத்தும், தமிழ் பட்டப்படிப்பை தேர்வு செய்து படிக்க உள்ளதாக, சமையல் கலைஞரின் மகள் தெரிவித்துள்ளார்.
கோவை டவுன்ஹால் வைசீயாள் வீதியைச் சேர்ந்தவர் குமார். சமையல் பணிபுரிபவர். இவரது மகள் ஸ்ரீ வித்யா. கோவை அவிநாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைப்படிப்பு முடித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் மொத்தம் 1,172 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழ் 189, ஆங்கிலம் 189, வணிகவியல் 200, கணக்கு பதிவியல் 200, வணிக கணிதம் 199, பொருளியல் 195 என மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடம் எடுத்துள்ளார்.
தமிழ் மொழி மீது ஏற்பட்டுள்ள பற்று காரணமாக பி.ஏ. தமிழ் மொழிப்பாடத்தை எடுத்து பயின்று, தமிழ் ஆசிரியை ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார். பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகள் தமிழ் மொழியை தவிர்த்த பட்டப்படிப்புகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கும் நிலையில், அதிக மதிப்பெண் எடுத்தும் தமிழ் மொழி பட்டப்படிப்பை தேர்வு செய்ய உள்ளதாக ஸ்ரீ வித்யா தேர்வு செய்ய உள்ளார்.
அதற்கு அவர் கூறும் காரணங்கள், எனக்கு தமிழ் மொழியின் மீது எப்போதும் ஆர்வம் அதிகம். அதனால்தான் 10ம் வகுப்பு தேர்வில் 469 மதிப்பெண்கள் எடுத்த போதிலும் கலை பாடப்பிரிவை மேல்நிலை வகுப்பில் தேர்வுசெய்தேன்.
தமிழ் மொழியியல் முனைவர் பட்டம் வரை பெற வேண்டும். சிறந்த தமிழ் ஆசிரியை ஆக வேண்டும் என்பது விருப்பம். தமிழ் மொழியை அழிக்கும் விதமாக தற்போது ஆங்கில ஆதிக்கம் உள்ளது. அதனை போக்க வேண்டும் என்பது லட்சியம். சிலப்பதிகாரம், புறநானூறு, கம்பராமாயணம், பாரதியாரின் கவிதை, தமிழ் இலக்கண இலக்கியம் ஆகியவை தமிழை அதிகமாக நேசிக்க வைத்தன. தமிழ் ஆசிரியர் வீரம்மாவின் தமிழ் கற்பிக்கும் திறன் என்னை வெகுவாக கவர்ந்தது. இதனாலேயே நான் தமிழ் எடுத்து படிக்க விரும்புகிறேன். கவிதை, கட்டுரை எழுதுவதில் எனக்கு ஆவல் அதிகம். கட்டுரைப் போட்டிகளில், மாவட்ட அளவில் பரிசுகளை பெற்றுள்ளேன் என்றார்.
ஸ்ரீவித்யாவின் பெற்றோர் கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாக கொண்டவர்கள். தமிழ் மொழியை நேசிக்கும் மலையாளக் குடும்பம்
நன்றி - தமிழ் இந்து
No comments:
Post a Comment