இந்திய தேசியக் கொடி
இந்திய தேசியக் கொடி அல்லது மூவர்ண கொடி என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், 22 ஜூலை 1947 அன்று ஏற்கப்பட்ட இந்திய நாட்டின் கொடியாகும். 26 ஜனவரி 1950 இல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது.
நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக, காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் என கூறப்படும் 24 கோல்களை கொண்ட சக்கரம் உண்டு. இச்சக்கரம் கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில் நான்கில் மூன்று பாக உயரத்தை கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும். இக்கொடி இந்தியப் போர்க் கொடியாகவும் விளங்கும்.
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கைய்யா. அரசியல் முறைப்படி, தேசியக்கொடியைக் கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும். தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாள்தல் முறைகள், இந்திய கொடிச் சட்டத்தால் ஆளப் படுகிறது.
கொடி உருவாக்கம்
தேசியக்கொடியின் வண்ணங்கள், வெவ்வேறு வண்ணக் குழுக்களின் கீழ், பின்வருமாறு வெளிப்படுத்தப்படும்.வண்ணம் | HTML | CMYK | துணி வண்ணம் | பான்டோன் வண்ணம் |
---|---|---|---|---|
காவி | #FF9933 | 0-50-90-0 | சிவப்பு | 1495c |
வெள்ளை | #FFFFFF | 0-0-0-0 | குளிர் சாம்பல் | 1c |
பச்சை | #138808 | 100-0-70-30 | இந்திய பச்சை | 362c |
கடற்படை நீலம் | #000080 | 100-98-26-48 | கடற்படை நீலம் | 2755c |
கொடியின் அம்ச பொருள் விளக்கம்
இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர், அப்போதைய பெரும்பான்மை கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ், 1931ஆம் ஆண்டு காவி, பச்சை, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்ட கொடியைத் தன் கொடியாக ஏற்றது. காவி நிறம் இந்துத்துவத்தையும், பச்சை நிறம் இஸ்லாமியத்தையும், வெள்ளை நிறம் ஏனைய பிற சமயங்களைக் குறிக்கும் வகையில் அமைந்தன. சில சமயம், வெள்ளை நிறம், அயர்லாந்தின் கொடியைப் போல மூவண்ணக் கொடியில் உள்ள காவி நிறத்தையும் பச்சையும் குறிக்கும் இரு சமயங்களுக்கு நடுநிலை நிறமாக உணரப்பட்டது. 1930ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ், ஒரு சக்கரத்தைக் கொண்ட மூவண்ணக் கொடியைத் தன் கொடியாக ஏற்றது. ஆனால் இக்கொடி எச்சமயத்திற்கும் பாகுபாடற்ற ஒரு கொடியாக பொருள் கொண்டது.
விடுதலைக்குச் சில நாட்களுக்கு முன்னர், ஒரு சிறப்புக் குழுமம், சில மாறுதல்களுக்கு உட்படுத்தப் பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய கொடியாக ஏற்றது. முன்னிருந்த சக்கரத்திற்கு பதிலாக, அசோக சக்கரம் இக்கொடியில் பயன்பாட்டுக்கு வந்தது. வெவ்வேறு சமயங்களை உணர்த்துவதாக இருந்த எண்ணத்தை மாற்ற, பின்னாளில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்ற சர்வப்பள்ளி இராதாகிருட்டிணன் அவர்கள் புதிதாக ஏற்கப்பட்ட இந்திய தேசியக் கொடியைப் பொருள் பட இவ்வாறு கூறினார்.
சாதுக்களின் நிறமான காவி நிறம், பொருளை துயிலுற குறிப்பதாகும். நம் தலைவர்கள், பொருள் சேர்ப்பதை துயிலுண்டு, வேலையின் காரணத்திற்கு தம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஒளியை குறிக்கும் வகையில் நடுவில் உள்ள வெள்ளை நிறம், நம் நன்னடத்தையின் பாதைக்கு வழி காட்ட வேண்டும். பச்சை நிறம், நம் நிலத்திற்கு உள்ள உறவையும் அதிலிருந்து வளரும் செடிகளின் பாரமாக அமைந்த நம் வாழ்வையும் குறிக்கும். அசோக சக்கரமோ, கொடியின் கீழ் வேலையாற்றும் மக்களுக்கு நியாய தருவத்தின் அடிப்படையாக அமையும். மேலும் சக்கரம், சுழலை குறிக்கும் வடிவமாக அமையும். நிற்கதியில் சாவு உண்டு, சுழலில் வாழ்வு உண்டு. இந்திய நாடானது, இனிமேலும் மாற்றங்களை எதிர்க்காமல், முன்னெறிச் செல்ல வேண்டும். இச்சக்கரமானது, அமைதியான மாற்றத்தை குறிக்கும் ஒரு சின்னமாக அமையும்.
பெரும்பான்மைக் கூற்றோ தேசியக் கொடியின் காவி நிறம், தூய்மையையும் கடவுளையும் குறிக்குமாறும், வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்குமாறும், பச்சை நிறம், புணர்ப்பையும், செம்மையையும் குறிக்குமாறு பொருள்படும்.
வரலாறு
20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி தேவைப்பட்டது. 1904ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். அதுவே பின்னர் நிவேதிதாவின் கொடி என கூற்று கொண்டது. சிவப்பு வண்ணத்தில, சதுர வடிவில், மஞ்சள் நிற உள்வடிவத்தை கொண்ட பேரிடியை உணர்த்துமாறு, ஒரு 'வஜ்ர' வடிவத்தையும், வெள்ளை தாமரையையும் நடுவில் கொண்டது. மேலும் அது வங்காள மொழியில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகளை உருக்கொண்டது. சிவப்பு நிறம் சுதந்திரப் போராட்டத்தை குறிக்கும் வகையிலும், மஞ்சள் நிறம் வெற்றியை குறிக்கும் வகையிலும், வெள்ளை நிறம் தூய்மையை குறிக்கும் வகையிலும் அமைந்தன.அக்கொடி, இந்திய மதங்கள் அனைத்தையும் நிலையுறுத்தவில்லை என மகாத்மா காந்தி கருதவே, புதிய கொடி ஒன்று வடிவமைக்கப் பட்டது. இக்கொடியில் வெள்ளை நிறம் மேலேயும், பச்சை நிறம் நடுவிலும், சிவப்பு நிறம் கீழேயும், வெவ்வேறு மதங்களை சமமாக குறிக்குமாறு அமைந்தன. அதில் சக்கரமோ எல்லா வர்ணங்களிலும் இடம் பெற்றன. இந்த கொடி, ஆங்கிலேய பேரரசிடம் இருந்து விடுதலைக்காக போராடிய அயர்லாந்தின் கொடிக்கு சமமாக உள்நோக்கத்தை கொண்டவாறு அனுசரிக்கப்பட்டது. முதன்முதலாக அகமதாபாத்தில் நடந்த காங்கிரசு கட்சி கூட்டத்தில் ஏற்றப்பட்ட இக்கொடி, இந்திய சுதந்திர போராட்டத்தின் மையமாக பெரிதும் பயன்படுத்தப் பட்டது.
ஆயினும் பெரும்பாலானோர், வெவ்வேறு மதங்களை உணர்த்துமாறு கொண்ட பொருளை விரும்பவில்லை. 1924ஆம் ஆண்டு கொல்கத்தாவில் குழுமிய அனைத்திந்திய சமசுகிருத குழுமம், இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கதத்தை உணர்த்தும் வகையில் காவி நிறத்தை கொடியில் சேர்க்குமாறு வலியுறுத்தியது. பின்னர், அதே வருடம், மற்ற மதத்தினரும் தத்தம் மதத்தை குறிக்க வெவ்வேறு மாற்றங்களை வலியுறுத்தினர்.
1947ல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ராஜேந்திர பிரசாத் அவர்களை தலைவராகவும், மௌலானா அபுல் கலாம் ஆசாத், கே. எம். பனிக்கர், சரோஜினி நாயுடு, சி. ராஜகோபாலச்சாரி, கே. எம். முன்ஷி, மற்றும் பி. ஆர். அம்பேத்கர் ஆகியோரையும் குழுநபர்களாக கொண்ட அமைப்பு, தேசியக் கொடியாக ஒரு கொடியை நியமிக்க விவாதித்தது. 23 ஜூன் 1947 அன்று தொடங்கிய அவ்விவாதம் மூன்று வாரங்களுக்கு பிறகு, 14 ஜூலை 1947 அன்று முடிவடைந்தது. அதன் காரணமாக, அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் கொடியை சில மாற்றங்களூடன் இந்திய தேசிய கொடியாக ஏற்றது. மேலும் இந்திய தேசியக் கொடிக்கு எவ்வித மத சாயலும் இருக்கக் கூடாதென்று முடிவெடுக்கப்பட்டது. முன் இருந்த சக்கரத்திற்கு பதில், சாரனாத்தின் சாஞ்சி ஸ்தூபியில் உள்ள தர்ம சக்கரம் ஏற்கப் பட்டது. இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்ட இந்திய தேசியக் கொடி முதல் முதலாக சுதந்திர இந்தியாவில் 15 ஆகஸ்ட் 1947ஆம் நாள் கொடியேற்றப் பட்டது.
கொடி தயாரிப்பு முறை
அளவு | மி.மீ |
---|---|
1 | 6300 × 4200 |
2 | 3600 × 2400 |
3 | 2700 × 1800 |
4 | 1800 × 1200 |
5 | 1350 × 900 |
6 | 900 × 600 |
7 | 450 × 300 |
8 | 225 × 150 |
9 | 150 × 100 |
கொடித்துணி, [காதி] என்கிற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்)இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்படுகிறது.
காதி என்பது சாதாரண துணி போல் இரன்டு இழைகள் கொண்டு நெய்யப்படாமல் மூன்று இழைகளால் நெய்யப்படுகிறது. இந்த வகை நெய்தல் மிகவும் அரிதான ஒன்றாகும் இந்தியாவில் பன்னிரெண்டுக்கும் குறைவான நெசவாளர்களே இதை செய்கின்றனர்.
- From
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF
No comments:
Post a Comment