Wednesday, 28 August 2013

சத்து இல்லாத சக்கையா கார்ன் ஃப்ளெக்ஸ்?

சத்து இல்லாத சக்கையா கார்ன் ஃப்ளெக்ஸ்?


 

         தனியார் பள்ளியின் ஆசிரியர் அவர். பள்ளிக் குழந்தைகளிடம், 'காலையில என்ன சாப்பிட்டீங்க?’ என்று கேட்க, பெரும்பாலான குழந்தைகள் 'கார்ன்ஃப்ளெக்ஸ்’ என்று கூறியிருக்கின்றனர். அதிர்ந்துபோய்விட்டார் ஆசிரியர். ''இன்றைக்கு பல வீடுகளில், கார்ன் ஃப்ளெக்ஸ்தான் காலை உணவாக இருக்கிறது. இட்லி, தோசை என நம் பாரம்பரிய உணவைப் பழக்கப்படுத்தாமல், கார்ஃன் ப்ளெக்ஸை மட்டுமே செய்துகொடுப்பது எந்தவிதத்தில் சரி? இதனால், குழந்தைகளோட ஆரோக்கியம்தானே பாதிக்கும்?'' என்கிறார் வேதனையுடன்.

''குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மக்காச் சோளத்தில் தயாராகும் 'கார்ன்ஃப்ளெக்ஸ்’ ஊட்டமான உணவுதானா?’ என்று சித்த மருத்துவர் சிவராமனிடம் கேட்டோம்.
''நோகாமல் நோம்பு கும்பிடுவது என்பது இதுதான். உணவு விஷயத்தில், எளிதாகச் செய்ய கூடியதாக இருக்க வேண்டும். அதேநேரம் சுவையானதாகவும் சத்தானதாகவும் இருக்க வேண்டும் என்ற நினைப்புதான் பெரும்பாலான பெற்றோருக்கு உள்ளது. குடும்பத் தலைவிகளின் இந்த எண்ணத்தைத் தெரிந்துகொண்டு, உணவு உற்பத்தியாளர்களும் பல்வேறு யுக்திகளைக் கையாள்கின்றனர். அதில் தற்போது 'கார்ன் ஃப்ளெக்ஸ்’தான் சக்கைப்போடு போடுகிறது.

அவல் போலதான் கார்ன் ஃப்ளெக்ஸும். அவல் ஒரு பாரம்பரிய உணவு. சங்க காலத்திலேயே, தயாரிக்கப்பட்ட (Pre cooked food) உணவு. புழுங்கல் நெல்லை, உலக்கையால் இடித்துக் காயவைத்து தயாரிக்கப்பட்டு பல நிலைக்குப் பிறகு அவலாக மாற்றுவார்கள். இப்படி தயாரானாலும், அதில் உள்ள சத்துகள் குறையாமல் இருக்கும். ஆனால், அவலைத் தயாரிக்கும் கால அளவுதான் அதிகம். இன்றைக்கு வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில், அனைவரும் விரும்பி சாப்பிடும் காலை உணவாகிவிட்ட கார்ன் ஃப்ளெக்ஸ், 'கெலாக்’ என்கிற ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரத்தில் தயாரிக்கப்படுகிறது. அதிக வெப்பத்தில் மக்காச் சோளத்தை வேகவைத்ததும், அதிகபட்ச அழுத்தத்தைக் கொடுத்து, தட்டையாக ஆக்கப்படுகிறது. பிறகு, அதை உலரவைத்ததும் தகடுபோல வரும். இது 120 டிகிரி சென்டிகிரேடில் உலர்த்தப்படுகிறது.
வைட்டமின், தாது உப்புக்கள் தெளிக்கப்பட்டு, கெட்டுப்போகாமல் இருக்க, ஒன்றோடு ஒன்று இணையாமல் இருக்க பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்படும். மொறுமொறுப்புக்காகவும் அதிக நாட்கள் மனம் சுவை கெடாமல் இருக்கவும் ரசாயனங்கள் சேர்க்கப்படும். இப்படி, அதிக அளவு அழுத்தம், உயர் செயல்முறையில் தயாராகும் கார்ன் ஃப்ளெக்ஸில் புரதம், நார்ச் சத்து போன்ற சத்துகள் போய்விடும். பிறகு, என்னதான் ஊட்டச்சத்துகள் சேர்த்தாலும், அது முழுமையாக இருக்காது. சத்துகள் அதிகம் இருப்பதாக விளம்பரப்படுத்தப்படுகிறதே தவிர, எல்லாச் சத்துகளும் இழந்த ஒரு சக்கைதான் கிடைக்கிறது'' என்ற டாக்டர் சிவராமன், காலை உணவு பற்றிய டிப்ஸ்களை அடுக்கினார்தருகிறார்.

காலை உணவு சத்தானதாக இருக்கவேண்டும். அப்போதுதான் வளரும் குழந்தைகளுக்கு கூர்மையான அறிவு, செயல்திறன் நன்றாக இருக்கும்.

உணவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட கே.டி.அச்சையா என்ற உணவியல் வல்லுநர், 'எல்லா நாட்டு உணவுகளையும் ஆராய்ந்ததில், சிறந்த காலை உணவு இட்லி, தோசைதான்’ என்கிறார்.

இட்லி, தோசை மாவைப் புளிக்கவைக்கும்போது அதில், நல்ல நுண்ணுயிரிகள் சேர்ந்துவிடுகின்றன. இதனால், வயிற்றுக்கு ஜீரணத்தைத் தந்து புற்றுநோய் வராமலும் தடுக்கிறது. அதேசமயம் அதிகம் புளிக்கவைக்கவும் கூடாது. குழந்தை முதல் முதியவர்கள் வரை யாருக்கும் தொந்தரவு இல்லாத உணவும் இவைதான்.

பாக்கெட்டில் விற்கும் மாவை தவிர்த்து, வீட்டிலேயே மாவு அரைத்து பயன்படுத்துங்கள்.

சத்தான உணவு அந்த நேரத்தில் தயாரித்ததாக இருக்க வேண்டும். கார்ன்ஃப்ளெக்ஸ் வாங்குவதைவிட, கைக்குத்தல் அவல், சிவப்பு அரிசி அவல் வாங்கித் தரலாம்.

கார்ன்ஃப்ளெக்ஸ் 200 கிராம் 150 ரூபாய் என்றால், ஒரு கிலோ அவல் 60 முதல் 70 ரூபாய்க்குள் கிடைத்துவிடுகிறது.

கார்ன்ஃப்ளெக்ஸ், ஒரு ஜங்க் ஃபுட் மாதிரிதான். அதில் ஸ்ட்ராபெரி, கோகோ, சாக்லெட் போன்ற சுவையூட்டிகளைக் கலந்து நொறுக்குத் தீனியாகவும் சாப்பிடுகின்றனர். இதில் எந்தப் பலனும் இல்லை.

-ரேவதி @ டாக்டர் விகடன்

No comments:

Post a Comment