Saturday, 17 August 2013

அலைபேசியில் தமிழ்

அலைபேசியில் தமிழ்
 
தாய் மொழியில் அலைபேசியை பயன்படுத்துவோம். தமிழை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வோம். அதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.

தமிழ் எங்கு அழிந்து விடுமோ என்ற அஞ்சிய காலத்தில் தமிழை மின்னணு மொழியாக மாற்றி கணினித் தமிழாக மாற்றிய பெருமை சில தமிழ் ஆர்வலர்கலையே சாரும். கணினியில் தமிழ் பயன்பாட்டிற்கு வந்த பிறகும் அதை மின்னஞ்சலில், தகவல் தொடர்பில் தமிழ் மக்கள் பெரிதும் பயன்படுத்தவில்லை. ஆனால் முகநூல் மக்களிடம் பரவலாக பயன்பாட்டில் வந்த பிறகு தான் தமிழ் தட்டச்சு பலகையின் வாயிலாக எளிமையாக எல்லோரிடமும் சென்று சேர்ந்தது. தமிழை பயன்படுத்தவே மாட்டேன் என்று சொல்லும் நபர்களும் வேறு வழியின்றி தமிழை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தமிழில் செய்தி வெளியிட்டால் தான் அது மக்களிடம் சேருகிறது என்ற உண்மை அறிந்த பின் சமூக வலைத் தளங்களில் உள்ள பிரபலங்கள் கூட தமிழில் தட்டச்சு செய்யத் தொடங்கினர். தமிழில் பதிவிட்டால் தான் தங்களுக்கு மரியாதை என்று பகட்டானவர்களும் உணரத் தொடங்கினர்.

கணினியில் மெல்ல மெல்ல தமிழ் வளர்ச்சி அடைந்தாலும், அலைபேசியில் தமிழை பயன்படுத்தும் நபர்கள் குறைவாகவே உள்ளனர். தொழில்நுட்ப பிரச்சனைகள் , தமிழை பயன்படுத்த இயலாமை , விரும்பாமை போன்ற காரணத்தால் அலைபேசியில் தமிழ் மொழி வளராமல் இருந்தது. ஆனால் இப்போது வலை சமூகத்தில் தமிழ் மொழியின் பயன்பாடு அதிகரித்து வரும் காரணத்தால் , பன்னாட்டு பெரு நிறுவனங்கள் தங்கள் சந்தையை விரிவுபடுத்த அலைப்பேசியில் தமிழ் மொழியை அறிமுகம் செய்து வருகிறது. ஏற்கனவே நோக்கியா, எச் டி சி போன்ற அலைபேசிகளில் தமிழ் மொழியின் பயன்பாடு இருந்தாலும் பலர் அதை பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர்.

இப்போது சாம்சங் அலைபேசி முழுக்க முழுக்க அனைத்து செயலிகளையும் தமிழில் பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்தி உள்ளது . அதாவது தமிழை அலைபேசியில் செயலாக்க மொழியாகவே நாம் பயன்படுத்தலாம். விளையாட்டு, அரட்டை, இசைக் கருவிகள், மற்ற தொழில் நுட்பங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் பயன்படுத்தலாம். Menu, Contacts, Settings, keypad, message போன்ற அனைத்து ஆங்கில பயன்பாடுகளும் இனி தமிழ் மொழியில் பட்டியல், தொடர்புகள், அமைப்பு, விசைப்பலகை, செய்தி போன்றதாக மாறிவிடும். இதன் மூலம் தமிழ் மொழி தமிழர்களிடையே கலப்பில்லாமல் சென்று சேரும். மக்களும் இப்படியான தமிழ் கலைசொற்களை தங்கள் அன்றாட வாழ்கையில் பயன்படுத்தலாம். தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல அலைபேசியை தமிழ் வழியில் மாற்றுவது இன்றியமையாதது ஆகும்.

மேலும் அலைபேசியில் தமிழ் மொழியன் பயன்பாடு அதிகரிக்கதால், தமிழ் படித்த இளைஞர்களுக்கு இந்த அலைபேசி நிறுவங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும். புதிய கலைசொற்களை உருவாக்கவும் , தமிழில் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்கவும் இது பெரிய அளவில் உதவி புரியும். எப்படி முகநூலை தமிழில் பயன்படுத்த தொடங்கிய பின்பு பேஸ்புக் தளம் தமிழ் மொழிக்காக பல்வேறு வசதிகளை உருவாக்கி கொடுத்ததோ அவ்வாறே இந்த அலைபேசி நிறுவனங்களும் அதை சார்ந்த மென்பொருள் நிறுவங்களும் தமிழ் மொழியில் பல்வேறு வசதிகளை தமிழர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். தமிழ்படித்த தமிழர்களுக்கு வேலை வாய்புகள் பெருகும்.

ஆகவே இதை படிக்கும் தமிழர்கள் அனைவரும் தங்களுடைய அலைபேசியை தமிழுக்கு மாற்ற முயற்சி செய்யவும். புதிய அலைபேசி வாங்குவதாக இருந்தால் அந்த அலைப்பேசியில் தமிழ் வழியில் பயன்பாடு உள்ளதா என்று கேட்டு வாங்கவும். வெறும் தமிழில் தட்டச்சு செய்யும் வசதி மட்டும் இருந்தால் போததாது . அலைபேசியில் உள்ள அனைத்து செயலிகளும் தமிழில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும். அலைபேசியில் தமிழில் செய்தி அனுப்பவும், கருத்தை பதிவு செய்யும் வசதியும் உள்ளதா என உறுதி செய்து வாங்கவும்.

இசை இயல் நாடகத் தமிழாக வாழ்ந்த தமிழ் இப்போது மின் தமிழாக உருவெடுத்து வந்துள்ளது. அதை முறையாக தமிழர்கள் பயன்படுத்தினால் தமிழை அழியா மொழியாக நாம் தக்கவைக்கலாம். இந்தியாவில் இந்தி மொழிக்கு மட்டுமே இந்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்து வரும் நிலையில், இப்போது தமிழ் மின்னணு மொழியாக பயன்பாட்டில் வந்துள்ளது என்பது தமிழை வளர்க நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகும். இதை பயன்படுத்தி தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம் .

வாழ்க தமிழ் . வளர்க தமிழர் நாடு .

- Rajkumar Palaniswamy
(தமிழர் பண்பாட்டு நடுவம்)

No comments:

Post a Comment