Monday, 12 August 2013

தமிழ் வரலாற்றுப் பதிவுகள்



தமிழக வரலாற்றை மாற்றிய இரு முக்கியமான போர்கள் !.

வரலாற்றில் எத்தனையோ போர்கள் நடந்திருந்திருந்தாலும், சில போர்களால் தமிழகத்தின் வரலாறே மாறியுள்ளது, அப்படியான போரில் குறிப்பிட்டு நாம் பார்க்க வேண்டியது " தெள்ளாற்றுப் போர் ". இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போர்களால் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

" தெள்ளாறு ", இன்றைக்கு, திருவண்ணாமலை மாவட்டம்,வந்தவாசி வட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம், பல்லவர்கள் காஞ்சியை தலைநகராக கொண்டு கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் வலிமையுடன் ஆட்சி புரிந்தவர்கள். இவர்களை அழிக்க எத்தனையோ போர்கள் நடந்திருந்தாலும், குறிப்பாக சோழரும், பாண்டியரும் ஒன்றாக இணைந்து பல்லவ பேரரசின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைத்தது இங்கு தான்,பாண்டியர்கள் பேரரசர்கள், சோழர்கள் அங்கும் இங்குமாய் சிற்றசர்களாகவே இருந்தனர்,அப்போது ஆட்சி செய்த வந்த பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850 ) ,இங்கு நடந்த போரில் சோழர் மற்றும் பாண்டிய கூட்டுப் படையை எதிர் கொண்டு அதில் வெற்றியும் கண்டான், அதுமட்டுமல்லாது அவர்களை கடம்பூர்,வெறியலூர்,வெள்ளாறு,பழையாறு ஆகிய இடங்களில் எதிர்கொண்டு பாண்டிய நாட்டு எல்லை வரை ஓட ஓட விரட்டினான், சோழர்கள் பல்லவர்களுக்கு கப்பம் கட்ட உடன்பட்டனர் !. அது முதல் நந்திவர்மன் " தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் " என போற்றப்பட்டான்.இந்த போர் குறித்து ஏராளமான கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன, அவன் மீது பாடப்பெற்ற " நந்திக் கலம்பகத்தில் ' இந்த தெள்ளாற்று வெற்றியினை பலவாறு புகழந்துரைக்கிறார்கள் . இந்த போரின் வெற்றிக்குப் பிறகு பல்லவர்கள் பெரிதும் வலிமை பெற்றனர், இறுதிக்காலம் வரை பகைவர்கள் நந்திவர்மனை கண்டு அஞ்சியே இருந்தனர்.பல்லவர்கள் தங்கள் வலிமையை நிலைநிறுத்திய போராக இது விளங்கியது.

அடுத்தாக வடக்கே கங்கை வரையும், தெற்கே கடல் கடந்து கடாரம் வரை ஆட்சி புரிந்த சோழப் பேரரசு !.விஜயலாயன் தொடங்கி,ராஜ ராஜன் சோழன் , ராஜேந்திரன் சோழன் என்று புகழின் உச்சிக்கே சென்ற சோழர்கள் கி.பி-1279 பிறகு எங்கே சென்றார்கள் ? அவர்கள் வீழ்ந்த இடமும் இந்த "தெள்ளாறு" தான் . சோழப் பேரரசு மூன்றாம் ராஜ ராஜனின் ஆட்சியின் போது அழிவின் விளிம்பில் இருந்தது, தெற்கே " சுந்தர பாண்டியன் " சற்றே வலிமை பெற்று, சோழர்களின் மீது போர் தொடுத்தான்,பாண்டியனுக்கு அஞ்சிய சோழன் காஞ்சிபுரத்தை நோக்கி ஓடினான், அவனை காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த தெள்ளாற்றில் இடைமறித்து போர் புரிந்தான், அதில் மூன்றாம் ராஜ ராஜன் தோல்வியுற்றான்,அது சோழர்களுக்கு பெரும் பின்னடைவாய் இருந்தது.பின்னர் காடவ மன்னன் அவனது தலைநகரான சேந்தமங்கலத்திற்கு கொண்டு சென்று அங்கு சோழனை சிறை வைக்கப்பெற்றான்.இதை அறிந்த பாண்டியனும், சோழனின் மாமனாரான மேலைச் சாளுக்கிய மன்னனும் சேந்தமங்கலத்தின் மீது போர் தொடுத்து சோழனை சிறை மீட்டனர், சேந்தமங்கலமும் அதன் கோட்டையும் முற்றிலுமாக அழிக்கப்பெற்றது, இங்கு தற்போது தமிழக அரசு தொல்லியல் துறை அகழாய்வு செய்து கோட்டைப் பகுதிகளையும், காடவர் தலைநகரையும் வெளிக்கொணர்ந்தது.மூன்றாம் ராசா ராசனுக்கு பின், மூன்றாம் ராஜேந்திரன் சிறிது காலம் ஆட்சி புரிந்தான், பின்னர் கி.பி-1279- ல் சோழப் பேரரசு தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போனது !.

இவ்வாறு இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போருக்கு பின்னர் தமிழகத்தின் வரலாற்றின் பாதையே மாறியுள்ளது, ஒரு வேலை முதல் போரில் பல்லவர்கள் தோற்று பாண்டியர்கள் வெற்றிபெற்றிருந்தால், சோழ வம்சமே மீண்டும் வராமல் போயிருக்கும், அவர்கள் பாண்டியர்களுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாகவே இருந்திருப்பார்கள் !.தஞ்சை கோயில், கடாரம் வரை ஆட்சி என தமிழர்களின் புகழ் விரிவடையாமலே சென்றிருக்கலாம் !. ஒரு வேலை இரண்டாவதாக காடவர்களுடன் நடந்த போரில் சோழர்கள் வென்றிருந்தால் ? இன்னும் அவர்கள் வலிமையுடன் தமிழகத்தை ஆண்டிருப்பார்கள், கடாரம் வரை கப்பலில் சென்று போர் புரிந்த சோழர்களுக்கு,ஆங்கிலேயர்களை விரட்ட எவ்வளவு காலம் பிடித்திருக்கும் ?!..

(SOURCE : " வந்தவாசிப் போர் - 250 என்ற புத்தகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற செய்தி)


நன்றி

- தமிழ் எனது தாய் மொழி

No comments:

Post a Comment